5 reasons for BJP victory in Gujarat

குஜராத், இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிந்து இரண்டிலும் பா.ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது.

ஆனால், பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, எதிர்பார்த்ததைப் போல் மிகப்பெரிய வெற்றியை குஜராத் மாநிலத்தில் அந்த கட்சியால் பெற முடியவில்லை என்பது சிறிய சறுக்கல் என்றும் கூறலாம்.

ஆனாலும், தொடர்ந்து 6 முறையாக ஆட்சி அமைப்பது, 23 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பா.ஜனதா கட்சியின் கடின உழைப்புக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரம் என்றுதான் கூறமுடியும்.

குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா கட்சிக்கு கிடைக்க வெற்றி 5 முக்கியக் காரணங்களை குறிப்பிடலாம். அதில் முக்கியமானதும், தவிர்க்க முடியாததுமாக இருப்பவர் பிரதமர் மோடி ஆவர்.

1. பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா கட்சி 6-வது முறையாக ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணம் பிரதமர் நரேந்திர மோடியும் மற்றும் மோடி என்ற “பிராண்ட் நேம்”( Brand Modi) என்றால் மிகையில்லை.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து, உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல்வரை, தற்போது நடந்து முடிந்த குஜராத்தேர்தல்வரை மோடி என்ற பெயர்தான் காரணம். இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

பா.ஜனதா கட்சிக்கு மிகபலம் வாய்ந்த நெட்வொர்க், வலுவான கட்டமைப்பு இருந்தபோதிலும், வெற்றி எனும் மீனை மோடி எனும்தூண்டில் இல்லாமல் இழுத்து இருக்க முடியாது.

மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பொருளாதார கொள்கைகள், ஆட்சியாளர்களுக்கு எதிரான அலையை ஏற்படுத்தினாலும் கூட, மக்கள் இன்னும் மோடி எனும் மாய வார்த்தையை நம்புகிறார்கள் என்பதற்கு இதைக்காட்டிலும் சாட்சி தேவையில்லை. கடந்த 15 நாட்களில் பிரதமர் மோடி 34 கூட்டங்களில் குஜராத்தின் பெருமையை, வலிமையை, அன்பை பேசி மக்களை வசப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. வலுவான கட்டமைப்பு

பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் பொறுப்பில் இருக்கும் பா.ஜனதா கட்சி வலுவான கட்டமைப்புடன் இருப்பது 2-வது காரணமாகும்.

இதில் மோடி எனும் பெயரை மக்கள் மத்தியில் உயர்த்தி, அதை வாக்காக மாற்றி இருக்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்பட்டு இருந்தது. ஆனால், தேசியத்தலைவர் அமித் ஷா,வின் தீவிர கண்காணிப்பு, அடிமட்டத் தொண்டர்கள் வரை ஆழமாகச் சென்று மேலாண்மை செய்தது அந்த கட்சிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

குறிப்பாக அந்த கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதும் வெற்றிக்கு காரணமாகும். அமித் ஷா கடந்த நவம்பர் 21ந்தேதியில் இருந்து குஜராத்தில் 6 ஆயிரத்து 665 கி.மீ பயணம் செய்து 31 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளது அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த வெகுமதியாகும். உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டத் தொண்டர்கள் வரைகடின உழைப்பும், வலுவான கட்டமைப்பும் இருப்பதால்தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசால் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை.

3. பா.ஜனதாவின் சித்தாந்தம்…

குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா கட்சி தனது வாக்காளர்களிடம் எப்போதும் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறது. பா.ஜனதா கட்சியின் பொருளாதார கொள்கைகள், ஜி.எஸ்.டி. வரி, ரூபாய் நோட்டு தடை போன்ற அறிவிப்புகளால் மன அதிருப்தியில் இருந்தபோதிலும், அந்த கட்சியின் சிந்தாந்தங்களை ஒதுக்கவில்லை.

குறிப்பிட்ட தரப்பிலான வாக்காளர்கள், அதாவது பட்டிதார் சமூகம், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள உயர்வகுப்பினர் பா.ஜனதா கட்சி பின்னடைவைச் சந்திப்பதை விரும்பவில்லை.

4. நல்ல நிர்வாகம்

பா.ஜனதா ஆட்சியை பார்த்து மாநிலத்தில் கிராமப்புறங்களில் அதிருப்தி நிலவியது, விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள், பல்வேறு சாதியினர் இடஒதுக்கீடு கோரி போராடினார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கையில், பா.ஜனதா அரசு குறிப்பாக மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்காக பணியாற்றுகிறது என மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையே வெற்றியாக மாறியுள்ளது. சமூகத்தில் உள்ள உயிர்குடியினர், தொழில்செய்வோர், பெரும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் பா.ஜனதா இருக்கும் வரை தங்களுக்கு பாதிப்பில்லை என நம்புகிறார்கள்.

5. குஜராத்தின் பெருமையை முன்நிறுத்தி தீவிர பிரசாரம்

பா.ஜனதா கட்சியில் பிரதமர் மோடியாகட்டும், மற்ற தலைவர்களாட்டும், குஜராத்தின் பெருமையைப் பற்றி பேச தவறவில்லை. பிரதமர் மோடி தனது பிரசாரங்கள் அனைத்திலும் ஜி.எஸ்.டி. ,ரூபாய் நோட்டு தடையை மக்கள் மனதில் இருந்து அகற்றும் விதமாக, வளர்சியைப் பற்றியும், குஜராத்தின் பெருமையையும், மண்ணின் மைந்தரான தன்னைப்பற்றியும் மட்டுமே பேசினார்.

அதுமட்டுமல்லாமல் மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விஷயங்களை பிரதமர் மோடி பேசியது, எதிர்க்கட்சியினர் குஜராத் மாநிலத்துக்கு இழைத்துள்ள துரோகங்கள், செய்ய தவறியவை ஆகியவற்றை பட்டியலிட்டு உணர்ச்சிகளுடன் விளையாடி வெற்றியை அறுவடை செய்துள்ளார்.

குறிப்பாக குஜராத் தேர்தல் வெற்றிக்கு பாகிஸ்தானுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி சதி செய்கிறது, மண்ணின் மைந்தர்களை காங்கிரஸ் மறக்கிறது போன்ற பிரசாரங்கள் குறிப்பிடத்தகுந்தவையாகும்.