குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்  5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 33 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில், நேற்றிரவு அந்த மருத்துவமனையின் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் மருத்துவமனையிலிருந்த 28 நோயாளிகளைப் பத்திரமாக மீட்டனர். ஆனால், இந்த தீவிபத்தில் சிக்கி 5 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்கப்பட்ட நோயாளிகளில் சிலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தீ விபத்து தொடர்பாக உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.