படித்தது ஐஐடி; விற்பது பசு மாடுகள்; வருமானமோ 500 கோடி ரூபாய்; சாதிக்கும் இரண்டு பெண்கள்!!
ஐ.ஐ.டி. முன்னாள் மாணவிகள் தொடங்கிய அனிமல் செயலி மூலம் 3 ஆண்டுகளில் ரூ.2,500 கோடிக்கு 5 லட்சம் மாடுகள் விற்பனையாகியுள்ளன.
மாடுகளைக்கூட ஆன்லைனில் விற்பனை செய்ய முடியுமா என்று பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், டெல்லி ஐ.ஐ.டி.யில் பட்டம் பெற்ற இளம் பெண்கள் இரண்டு பேர் ஆன்லைனில் மாடுகளை விற்பனை செய்வதை வெற்றிகரமான தொழிலாகச் செய்துவருகின்றனர்.
நீதுவுக்கு சொந்த மாநிலம் ராஜஸ்தான். கீர்த்திக்கு ஹரியானா. இருவரும் டெல்லி ஐ.ஐ.டி.யில் படித்தபோது, ஒரே அறையில் தங்கிப் படித்தார்கள். படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் சென்ற இரண்டு பேரும் ஒருநாள் மாடுகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கத் திட்டமிட்டனர். அதற்காக மாடு வளர்க்கும் விவசாயிகள் பலரையும் சந்தித்துள்ளனர். 2019ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு ஆன்லைன் மாடு விற்பனையைத் தொடங்கினர்.
இரண்டு பேரும் பெங்களூருவுக்கு வந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கள் அனிமல் (Animal) என்ற மொபைல் செயலியைத் தொடங்கினர். நீதுவின் சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவரே அனிமல் ஆப் மூலம் 24 மணிநேரத்தில் 3 மாடுகளை விற்பனை செய்தார். நீது மற்றும் கீர்த்தி இருவரின் குடும்பமும் விவசாயக் குடும்பம்தான். நீதுவின் தந்தைக்கே அனிமல் ஆப் பயன்பட்டது. அவரிடம் இருந்த ஒரு எருமை மாட்டை அனிமல் செயலி மூலம் விற்றார்.
தொழிலுக்கு வரவேற்பு இருப்பது தெரிந்ததும் இரண்டு பேரும் நண்பர்களிடம் ரூ.50 லட்சம் முதலீட்டைப் பெற்றனர். அடுத்த சில மாதங்களில் மும்பை மற்றும் சிங்கப்பூரைச் சேர்த்த இரண்டு நிறுவனங்கள் அனிமல் ஆப் மீது நம்பிக்கை வைத்து ரூ.44 கோடி முதலீடு செய்தன.
அதைத் தொடர்ந்து அதே ஆண்டு ரூ.102 கோடி முதலீடுகள் வந்துசேர்ந்தன. ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கும் அனிமல் ஆப் சேவையை விரிவுபடுத்தினர். அனிமல் செயலி தொடங்கிய 3 ஆண்டுகளில் ரூ.2,500 கோடிக்கு 5 லட்சம் மாடுகள் விற்பனையாகியுள்ளன.
"நான் வேலையை விட்டுவிட்டு தந்தையிடம் சொன்னவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நான் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்வேன் என்று நினைத்தார்கள். ஆனால் நான் மாடு விற்கப் போகிறேன் என்றேன்" என்கிறார் கீர்த்தி.
இந்தத் தொழிலில் இதுவரை ரூ.500 கோடி லாபம் ஈட்டியுள்ளனர். "அனிமல் ஆப் மூலம் பால் பண்ணை நடத்தும் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு'' என்கிறார் நீது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நடுக்கடலில் துல்லியமாக இலக்கை தகர்த்த பிரமோஸ் ஏவுகணை! இந்தியக் கடற்படையின் புதிய சாதனை!