நான்காவது கட்டமாக 72  தொகுதிகளில் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்தியாவில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இன்று நான்காவது கட்டமாக 9 மாநிலங்களில் உள்ள 72 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து விறுவிறுப்பாக வாக்களித்துவருகிறார்கள்.
இன்று நடைபெறும் தேர்தலில் பீகாரில் 5, ஜார்கண்ட்டில் 3, மத்திய பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 17, ஒடிசாவில் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 13 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதேபோல மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளும் காஷ்மீரில் அனந்தநாக் நாடாளுமன்றத் தொகுதியிலும் தேர்தல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
 நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் ஒடிஷாவில், இன்று  42 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தொகுதிகளில் மத்திய துணை ராணுவ படையினருடன் மாநில காவல்  துறையினரும் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை விடாமல் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 6-ம் தேதி ஐந்தாம் கட்டத் தேர்தலும் மே 12-ம் தேதி ஆறாம் கட்டத் தேர்தலும் மே 19 அன்று இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற உள்ளன.