கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இதுவரை 4, 675 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

குஜராத் மாநிலம், வதோதரா நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர், பங்கஜ் தார்வே கடந்த செப்டம்பர் 22-ந்தேதி தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் கார்கில் போருக்கு பின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல், துப்பாக்கிசூட்டில், பலியான இந்திய வீரர்கள் குறித்த விவரங்களைக் கேட்டிருந்தார். அந்த விவரம் கடந்த மாதம் 26-ந்தேதி அவருக்கு அளிக்கப்பட்டது. அதில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

கடந்த 15 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது நடத்திய தாக்குதலில், இதுவரை 4,675 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரியவந்துள்ளது. அதேசமயம், எத்தனை முறை அத்துமீறல்கள் நடந்துள்ளன என்பதை தெரிவிக்கவில்லை. 

அதேசமயம், 2001-ம் ஆண்டில் இருந்து நாட்டில் 7 ஆயிரத்து 908 தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் தீவிரவாத தாக்குதல்களில் மட்டும் 1,174 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.