இந்தியாவில் இதுவரை 67,700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2215 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 21,130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு குறைவுதான். 

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 22,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 8194 பேரும் தமிழ்நாட்டில் 7204 பேரும் டெல்லியிலும் 7200க்கும் அதிகமானோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று முதன்முதலில் உறுதியான கேரளாவில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 4123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியது முதல், 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுதான். 

31.15% பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 44 ஆயிரத்து 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.