வெளிநாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த, 39 நேபாள நாட்டு இளம்பெண்கள் கடத்தப்பட்டு டெல்லி பஹர்கஞ்ச் பகுதி ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் அவர்களை டெல்லி போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியா, தென் கொரியா, சௌதி அரேபியா, துபை, பஹ்ரைன் மற்றும் கத்தார் உள்ளிட்ட வளைகுடா  நாடுகளில் நேபாளத்தை சேர்ந்த சுமார் 3 கோடி பேர் புலம் பெயர்ந்து  தொழிலாளர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். வீட்டு வேலை முதல் கட்டட வேலைகள் வரைப் பல்வேறு தொழில்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மூலம் நேபாளத்திற்கு வரும் பணத்தால் அந்நாட்டு அரசுக்கு, வரிகள் மூலம் பெரும் வருவாய் கிடைக்கிறது. நேபாளத்தின் மொத்த உள்நாட்டு வருவாயில் 25 சதவீதம்  இதன் வழியாக கிடைக்கிறது.
 
இந்த நிலையில், நேபாள நாட்டிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு சட்டவிரோதமாக இளம்பெண்கள் கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்தன. இது நேபாளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தீவிர விசாரணையில் நேபாள போலீசார் இறங்கினர். விசாரணையின் முடிவில் நேபாள போலீசார் வெளியிட்ட  புள்ளி விபரங்களின்படி, மனித கடத்தல் தற்போது அந்நாட்டில் அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் தெரிவித்த புள்ளி விவரங்கள்படி, ஆண்டுக்கு  181 ஆக இருந்த கடத்தல் புகார்கள் கடந்த நான்கு ஆண்டுகளில்,  268 ஆக உயர்ந்துவிட்டது என்றும்,  இப்படி கடத்தப்பட்டவர்களில்  80 சதவீதம்  இளம்பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
 
இதனால் நேபாளம்  முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இளம்பெண்கள் கடத்தல் புகார்கள் குறித்து  விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில்,  டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக நேபாள நாட்டு பெண்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மகளிர் ஆணையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே உஷாரான டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், இளம்பெண்களை மீட்க அதிரடி நடவடிக்கையில் களமிறங்கினார். இதையடுத்து, அவர் டெல்லி போலீசாருடன்  இணைந்து ஒரு மீட்பு குழு அமைத்து தேடுதலைத் தொடங்கினார்.
 
அந்தக்குழுவினர் டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள அந்த ஹோட்டலில் நேற்று இரவு முழுக்க தீவிர சோதனை நடத்தினர். பின்னர்  அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த  39  நேபாள நாட்டு இளம்பெண்களை மீட்புக்குழுவினர்  பத்திரமாக மீட்டனர். நள்ளிரவு 1 மணிக்குத் தொடங்கி காலை 6 மணி வரை மீட்பு பணி நடந்தது.  இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் தனது டிவிட்டர் பக்கத்தில், " டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஹிரிடே இன் ஹோட்டலில், போலீசார் மற்றும் மகளிர் ஆணைய குழுவினர் மூலம் இரவுமுழுக்க சோதனை நடத்தப்பட்டது.  இதற்கு டெல்லி போலீசார் முழு ஒத்துழைப்புக் கொடுத்தனர். இதன் மூலம் வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 39 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த மீட்பு மூலம் மிகப்பெரிய அளவிலான பெண்கள் கடத்தல் வெளி உலகிற்கு தெரிவந்துள்ளது." என்று தெரிவித்துள்ளார்.


 
இந்த சோதனைகள் சென்ற ஜூலை மாதம் 25ம் தேதி முதல் தொடர்ந்து டெல்லி பகுதிகளில் நடந்து வந்துள்ளன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் டெல்லி வசந்த விகார் பகுதியில் இயங்கி வந்த சர்வதேச பெண்கள் கடத்தல் கும்பலை கைது செய்த போலீசார், அவர்களின் பிடியில் இருந்து நேபாளத்தைச் சேர்ந்த 18 பெண்களை மீட்டனர்.  சென்ற மாதத்தில் மட்டும் சுமார் 150 பெண்களை கடத்தல் கும்பல்களின் பிடியில் இருந்து டெல்லி போலீசார் மீட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.