ஈராக்கில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.

ஈராக் நாட்டின் மொசூல் நகரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஈராக் நாட்டின் வெளியுறவு அமைச்சருடன் சுஷ்மா பேச்சு நடத்தினார். இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் இந்தப் பிரச்சினை குறித்து அறிக்கை ஒன்றை நேற்று அவர் வெளியிட்டார்.

அதில் சுஷ்மா சுவராஜ் கூறி இருப்பதாவது-

‘‘ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுவதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

அது போன்ற ஆதாரங்கள் கிடைக்கும் வரையில், இந்தியர்களைத் தேடும் பணி தொடரும். அது குறித்த கோப்புகள் மூடப்பட மாட்டாது. ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் அவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அறிவிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன்.

நான் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்த மாட்டேன். இந்தப் பிரச்சினையில் அப்படி செய்வதன் மூலம் எனக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது? என எதிர்க்கட்சியினரை நான் கேட்க விரும்புகிறேன்.