36 years old VIP Culture ended

ரெயில்வே வாரிய தலைவர், உறுப்பினர்கள் மண்டலங்களுக்கு வந்தால் அவர்களை வரவேற்று, திருப்பி அனுப்பும் வரை பொது மேலாளர்கள் உடன் இருக்க வேண்டும் என்ற 36 ஆண்டுகால வி.ஐ.பி. கலாச்சாரத்தை ரத்து செய்து மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1981 ஆம் ஆண்டு வழக்கம்

ரெயில்வே துறையில் கடந்த 1981-ம் ஆண்டு முதல் ஒரு வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, ரெயில்வே வாரியத் தலைவர், உறுப்பினர்கள் மண்டல தலைமை அலுவலகங்களுக்கு வந்தால், அவர்களை பொது மேலாளர்கள் விமான நிலையத்துக்கு அல்லது, ரெயில்நிலையத்துக்கு சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, அவர்கள் திரும்பிச் செல்லும் வரை பொது மேலாளர்கள் உடன் இருக்க வேண்டும்.

அதிரடி உத்தரவு

இந்த 36 ஆண்டுகால வி.ஐ.பி. கலாச்சார முறையை மத்திய ரெயில்வே துறை அமைச்சகம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த மாதம் 28-ம் தேதி ரெயில்வே அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், “ ரெயில்வே வாரிய தலைவர், உறுப்பினர்கள் மண்டல தலைமை அலுவலங்களுக்கு சென்றால் அவர்களை விமானநிலையத்துக்கும், ரெயில்வே நிலையத்துக்கும் சென்று பொதுமேலாளர்கள் வரவேற்று, திரும்பி அனுப்பி வைக்கும் ‘ப்ரோட்டாகால்’ (நெறிமுறைகள்) உடனடியாக திரும்பப் பெறப்படுகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தேவையில்லை

இது குறித்து ரெயில்வே வாரியத் தலைவர் அஸ்வானி லோஹானி கூறுகையில், “ இனிமேல் எந்த வாரிய தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் எந்த அதிகாரியும் பூங்கொடுத்து, பரிசுகள் கொடுத்து வரவேற்க வேண்டாம்’’ என்றார்.

ஆர்டர்லி முறையும் ரத்து

மேலும், ரெயில்வே துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரெயில்வேயில் பணியாற்றும் அனைத்து மூத்த அதிகாரிகளும், தங்கள் வீடுகளில் உதவிக்காக வைத்து இருக்கும் ‘ஆர்டர்லி’ ரெயில்வே கடை நிலை ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

30 ஆயிரம் ஊழியர்கள்

மூத்த அதிகாரிகள் வீடுகளில் ஏறக்குறைய 30 ஆயிரம் டிராக்மேன் எனப்படும் ஊழியர்கள் அதிகாரிகள்வீடுகளில் எடுபிடி வேலை செய்து வருகிறார்கள் அவர்கள் அனைவரும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வேலைக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 ஆயிரம் ஆர்டர்லி ஊழியர்கள் மீண்டும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு திரும்பியுள்ளனர் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ குறிப்பிட்ட சூழலில் ஆர்டர்லியாக பணியாற்றும் ஊழியர்கள் தவிர்த்து மற்றவர்கள் உடனடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு திரும்ப வேண்டும். விரைவாக அவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என நம்புகிறோம்’’ என்றார்.

சொகுசு பயணத்துக்கு ‘ஆப்பு’....

ரெயில்வேயில் உள்ள மூத்த அதிகாரிகள் பணிநிமித்தமாக வெளி மாநிலம் செல்லும் போது ரெயில் உயர் வகுப்பிலும், சொகுசு பிரிவிலும் பயணிப்பார்கள். இனிமேல்,அவர்கள் சாதாரண 2-ம் வகுப்பு பெட்டியில் அல்லது, ஏ.சி. 3ம் வகுப்பிலும் சக பயணிகளோடு பயணிக்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.