மேற்கு வங்கத்தில் 34,000 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்; 100 பேர் கைது!
அடுத்தடுத்து நடந்த வெடி விபத்துகளைத் தொடர்ந்து மேற்கு வங்க காவல்துறை நடத்திய சோதனையில் 34,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 132 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தின் கிராமப்புறங்களில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக தொழிற்சாலைகளை நடத்திவந்ததாக சுமார் 100 பேரைக் கைது செய்துள்ளனர்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை மேற்கு வங்க மாநில மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மொத்தம் 132 வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். திங்கள்கிழமை தொடங்கிய சோதனை நாடியா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
"இதுவரை நாங்கள் கிட்டத்தட்ட 34,000 கிலோ வெடிபொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளோம், அவற்றை பதுக்கி வைத்து வியாபாரம் செய்ததற்காக குறைந்தது 100 பேரைக் கைது செய்துள்ளோம். குறிப்பாக நாடியா, தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் நேற்றிரவு நடத்தப்பட்ட சோதனையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்" எனவும் அதிகாரி கூறுகிறார்.
நாட்டின் மிகப்பெரிய உயர் நீதிமன்றத்தை நாளை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
வெடிபொருட்கள் மற்றும் பட்டாசுகள் கைப்பற்றப்பட்டது குறித்தும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்தும் மே 29ஆம் தேதிக்குள் மாநிலச் செயலகத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பல்வேறு மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் அடுத்தடுத்து விபத்துகள் நடந்ததன் பின்னணியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த பயங்கர விபத்துகளில் குறைந்தது 17 பேர் பலியாகியுள்ளனர்.
மே 16 அன்று பூர்பா மேதினிபூரில் உள்ள எக்ராவில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். திங்கட்கிழமை தெற்கு 24 பர்கானாஸில் உள்ள பட்ஜ் பட்ஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர், அதே நாளில் பிர்பூம் மாவட்டத்தில் துப்ராஜ்பூரில் நடந்த மற்றொரு வெடி விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. மால்டா மாவட்டத்தில் கார்பைட் குடோனில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாருய்பூர் பகுதியில் இருக்கும் ஹரால் பட்டாசு பஜாரை மூட மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள அனைத்து வணிகர்களும் தங்களிடம் உள்ள அனைத்து மூலப்பொருட்களையும் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலச் செயலகத்தில் ஹராலைச் சேர்ந்த வணிகர்களுடன் ஒரு சந்திப்பை நடத்த உள்ளார்.