மகாராஷ்டிராவில் மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டம் டபோலியில் அமைந்துள்ள டாக்டர் பாலசாஹேப் சவந்த் கொன்கன் வித்யாபீடம் என்ற வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஊழியர்கள் சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பிரேத சுற்றுலாத்தலமான மகாபலேஷ்வருக்கு பேருந்தில் சுற்றுலா சென்றனர். 

மும்பையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில்  ராய்காட் மாவட்டம் அம்பெனலி காட் என்ற மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக 200 அடி பள்ளதாக்கில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 33 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த ஒருவர் மேலே வந்து தகவல் தெரிவித்த பிறகே பேருந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. உடனே அப்பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதுவரை 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.