உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொத்துக்கள் கடந்த 3 ஆண்டுகளில் 32 மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

பா.ஜனதா வெற்றி

உத்தரப்பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குபின் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து கோரக்பூர் தொகுதி எம்.பி. யாக இருந்த மடாதிபதி யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவி ஏற்றார்.

மேலவைத் தேர்தல்

முதல்வர் யோகி ஆதித்யநாத் எம்.எல்.ஏ.வாக இல்லாததால் உத்தரப் பிரதேச மாநில மேல்அவையில் காலியாக உள்ள இடத்தில் போட்டியிட்டு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

அங்கு தற்போது மேலவையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு வருகிற 15-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

வேட்பு மனு

இதில் முதல்வர் யோகி ஆதித்ய நாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா, அமைச்சர்கள் ஸ்வதந்திர தேவ் சிங், மோஷின் ராஸா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுத் தாக்கலில் உள்ள பிரமாணப் பத்திரத்தில் ஒவ்வொருவரும தங்களின் சொத்துக்கணக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் முதல்வப் யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் 32 சதவீதம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

ரூ.96 லட்சம்

2014 நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்ட போது அவர், தனது சொத்து மதிப்பு ரூ.72.94 லட்சம் என குறிப்பிட்டு இருந்தார். இப்போது வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ. 96 லட்சம் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 32 சதவிகிதம் (ரூ.23.80 லட்சம்) உயர்ந்துள்ளது. இதில் 20 கிராம் தங்க காதணி, 10 கிராம் தங்க சங்கிலி ஆகியவை அடங்கும். அரசு அளிக்கும் சம்பளத்தை தொடர்ந்து தனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.