ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பின்னணியில் உள்ளது. இது தொடர்பாக பலமுறை பாகிஸ்தான் அரசுக்கு தகவல் தந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்  படாததாலும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு மீண்டுமொரு தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்த இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனை தடுக்கவே, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட்டில் உள்ள அந்த இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டார். ஆனால், பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 

புல்வாமா தக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,  காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. 

பாகிஸ்தான் எல்லை யொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை இன்று வீசியுள்ளது. இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.

மேலும் இந்திய விமானப்படை ஏறக்குறைய 21 நிமிடங்கள் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டு, அது குறித்து அந்நாட்டிற்கு தகவல் கொடுத்துவிட்டே வந்துள்ளது இந்திய ராராணுவப்படை.