பெங்களூரு நகரில் பெண்களின் பாதுகாப்பிற்காக சாலையில், ஆங்காங்கே எஸ் ஓ எஸ் (SOS) என்ற டெலிஃபோன் பூத் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் இதில் உள்ள பட்டனை அழுத்தும் போது ரோந்துபணியில் ஈடுபட்டுள்ள போலீசார்களுக்குத் தகவல்கள் அளிக்கப்படும். 

நாட்டில் நாளுக்குநாள் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதுகாப்பின்றி நடமாடமுடியாத சூழல் உள்ளது. பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் படித்த பெண்கள் இரவு பகல் பாராமல் வேலைக்கு போவதும் வருவதுமாக உள்ளனர்.

இந்த மாதிரியான சூழ்நிலைகளில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் பெங்களூரு நகரில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் எஸ் ஓ எஸ் (SOS) என்ற டெலிஃபோன் பூத் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குடிசைபகுதிகள் போன்ற முக்கிய இடங்களில் இந்த SOSபூத்கள் வைக்கப்பட்டுள்ளன.


YouTube video player
இந்த பூத்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் பெண்கள் தனியாக பயணிக்கும் போதோ, அல்லது பாதுகாப்பாற்ற சூழல் இருப்பதாக உணர்ந்தாலோ SOS என்ற டெலிஃபோன் பூத் இயந்திரத்தில் உள்ள சிகப்பு நிற பட்டனை மட்டும் க்ளிக் செய்தால் போதும். உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கும், ரோந்து பணியில் ஈடுபட்டள்ள காவலர்களுக்கு தகவல் கொடுக்கப்படும்.

அதன் பேரில், அழைப்பு வந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பதற்காக இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV camera) கேமரா மூலம் போலீசாரால் கண்காணிக்கப்படும். மேலும், காவல் உதவி மையத்தில் உள்ள போலீசார் அல்லது, ரோந்து பணியில் உள்ள போலீசார் உடனடியாக தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்று ஆபத்தில் உள்ள பெண்களை காப்பற்ற முடியும் என கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு நகரில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.