ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் இணைந்து என்கவுண்ட்டர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் கூட்டாக இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது அங்கிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு மேஜர் உள்பட இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இந்நிலையில், பாராமுல்லா மாவட்டத்தின் சோப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுண்ட்டரில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ்காரரும் காயம் அடைந்ததாக வடக்கு காஷ்மீர் ஐ.ஜி.பி. நிதிஷ் குமார் தெரிவித்தார்.
முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதியான அபு துஜானா பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.