கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(IX 1344). கோழிக்கோடு அருகேயுள்ள காரிப்பூர் விமான நிலையத்தில் இன்று இரவு 7.40 மணிக்கு தரையிறங்கியது. 

கேரளாவில் மழை பெய்துவரும் நிலையில், தரையிறங்கும்போது 35 அடியிலிருந்து விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளிவந்துள்ளது. மழை காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என தெரிகிறது. ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்புப்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், தேசிய பேரிடம் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். 

கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய 2 மாவட்ட ஆட்சியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளை ஒருங்கிணைத்துவருகின்றனர். நாம் இந்த செய்தியை எழுதிய நேரத்தில் நிலவரப்படி, 14 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயமடைந்த 15 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் 123 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் விவரம் வெளிவந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக இந்த விமானத்தில் வந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 3 பயணிகள் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஃபைசல் பாபு என்பவரின் மனைவி(28) ஷானிஜா மற்றும் 5 வயது மகன் முகமது ஜிடான் ஆகிய இருவர் மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்கா பள்ளிப்பாடியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் என தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 3 பேர் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.