3 Muslims working in Ayodhya Ram Temple
டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு நாள். வரலாற்றின் கறுப்பு நாளாக இன்று முஸ்லிம்களால் அனுசரிக்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.79 ஏக்கர் இடம் இன்றும் வக்பு வாரியத்துக்கும், இந்து அமைப்புகளுக்கும் இடையே தீர்வு எட்டப்படாத பிரச்சினையாக இருந்து வருகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை
சர்ச்சைகள் பல இருந்தபோதிலும், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை இருக்கும் நாடு என்பதை உணர்த்தும் நிகழ்வுள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதை எந்தவிதமான மதவாத சக்திகளாலும் தகர்க்க முடியாது.
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு முஸ்லிம்கள் 3 பேர் மதங்களைக் கடந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வருகிறார்கள் என்பது பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.
3 முஸ்லிம்கள்
அயோத்தி நகரில் கடும் மழை பெய்தாலோ?, புயலடித்தாலோ? ராமர் கோயிலின் முன்பு இருக்கும் தகரக் கூரை பெயர்ந்துவிடும். அதுபோன்ற சிக்கலான நேரத்தில் பொதுப்பணித்துறை முதலில் நாடுவது அப்துல் வாகித்தின் உதவியைத் தான்.
அதுபோல, ராமர் சிலைக்கு புதிய துணிகள் தைத்து கொடுக்க வேண்டுமென்றால் முதலில் அங்குள்ள தையற்கலைஞர் சாதிக் அலிதான் இந்து மதகுருவால் அழைக்கப்படுகிவார். அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கருவுறைக்கு மின்வசதியை செய்து கொடுத்து வருவது மெகபூப் . ஆக, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 3 மனிதர்கள்தான் மதங்களைக் கடந்து அங்கு சேவையாற்றுகிறார்கள்.
ராமர் சிலைக்கு துணி
இது குறித்து டெய்லர் சாதிக் அல் கூறுகையில், “ அயோத்தி நகரில் குர்தா, பைஜாமா அனைவருக்கும் தைத்து வருகிறேன். இருந்தாலும், ராமர் சிலைக்கு துணி தைக்க வேண்டுமானால், முதலில் அங்குள்ள மதகுரு என்னைத்தான் அழைப்பார்.
கடந்த 50 ஆண்டுகளாக நானும், எனது மகனும், இந்துக்கள், முஸ்லிம்கள், இந்து, முஸ்லிம் மத குருக்களுக்கு ஆடைகள் தைத்து கொடுக்கிறோம். அயோத்தியில் உள்ள ஹனுமன் கோயிலுக்குச் சொந்தமான கடையில்தான் தையல் கடையும் வைத்து மாதம் ரூ.70 வாடகையும் கொடுத்து வருகிறேன். ராமர் சிலைக்கு துணி தைத்துக் கொடுப்பதுதான் எனக்கு இருக்கும் மிகப்பெரிய மனத்திருப்தியாகும். கடவுள் அனைவருக்கும் ஒன்று தானே ’’ என்கிறார்.
பாதுக்காப்பு அரண்கள்
வெல்டிங் கடை வைத்து இருக்கும் அப்துல் வாகித் கூறுகையில், “ கடந்த 1994ம் ஆண்டில் இருந்து ராமர் கோயிலுக்காக பணியாற்றி வருகிறேன். நான் இந்தியன், இந்துக்கள் என் சகோதரர்கள். கான்பூரில் இருந்து தேவையான பொருட்களைக் கொண்டு வரும்போது, நான் கோயிலுக்கு தேவையான பணிகளைச் செய்கிறேன். கோயிலுக்காக பணியாற்றும்போது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
தீவிரவாதத்துக்கு மதம் இல்லை
கடந்த 2005ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இங்கு தாக்குதல் நடத்தியபின், கோயிலின் பாதுகாப்புக்காக அரண்கள், கம்பிகள், இரும்பு தடுப்புகளை நான் தான் அமைத்துக்கொடுத்தேன். தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்துக்கு மதம் இல்லை’’ எனத் தெரிவித்தார்.
வயரிங் பணி
கடந்த 1995ம் ஆண்டு ராமஜென்ம பூமியில் சமூக சமையல்கூடம் அமைப்பதற்காக செய்த உதவியில் இருந்து, ராமர் கோயில் கருவறையில் 24 மணிநேரமும் மின் விளக்கு எரிய மெகபூபா என்ற முஸ்லிம் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று பேரும், இந்து மதகுருவுடன் நடந்து சென்று சரயு நதிக்கரையில் உள்ள கடையில் அடிக்கடி தேநீர் குடிப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.
இந்த மூன்று பேரும் ‘மதம்’ பிடிக்கவில்லை.. தடையில்லை
