3 indian soldiers shot dead in pakishtan attack
இந்திய ராணுவம் மீண்டும் எல்லையை தாண்டிச் சென்று பாகிஸ்தான் பகுதியில் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் 3 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் தகர்க்கப்பட்டன.
அத்துமீறி தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்து அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்கிறது.
அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வபோது எல்லைப் பகுதியில் துப்பாக்கி சூடு தாக்குதலையும் நடத்தி வருகிறது.
சமரசத்துக்கு மறுப்பு
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுடன் சமரச பேச்சு நடத்த பாகிஸ்தான் ராணுவம் முன்வந்தும் அதை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.
எல்லையில் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பேச்சுக்கே இடமில்லை என்று, இந்திய ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் சமீபத்தில் திட்டவட்டமாக அறிவித்து இருந்தார்.
4 பேர் வீர மரணம்
இதற்கிடையில், ராஜோரி மாவட்டம் கெரி செக்டாரில் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்து மீறி நடத்திய தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
இது இந்தியாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் இந்த அடாவடி செயலுக்கு இந்தியா மீண்டும் சரியான திட்டமிடலுடன் எல்லை தாண்டிய நடவடிக்கையை முன்னெடுத்து உள்ளது.
பதிலடியில் 3 பேர் பலி
எல்லையை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று அங்கிருந்த பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர், ஒருவர் காயம் அடைந்தார் என செய்தி வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தினால் எல்லையில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது, எல்லை முழுவதும் பாதுகாப்பு படை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், ராவ்லாகோட் செக்டாரில் இந்திய ராணுவம் இந்த அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது.
பதிலடி தொடரும்
பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில துணை முதல்-அமைச்சர் நிர்மல் சிங் பேசுகையில், “பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்தியாவின் பொறுமையை சோதிக்க முயற்சி செய்தால் அவர்கள் கடுமையான விளைவை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும். அவர்கள் நம்முடைய ராணுவ வீரர்கள் 4 பேரது உயிரை எடுத்ததற்கு பதிலடியை கொடுத்து உள்ளோம், இதுபோன்ற பதிலடி தொடரும்,” என கூறி உள்ளார்.
மீண்டும் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்?’
பாகிஸ்தான் ராணுவத்தின் இதுபோன்ற தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏற்கனவே கடந்த ஆண்டில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கள் புகுந்து அதிரடி துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தி பாகிஸ்தான் முகாம்களை அழித்தது. இதில் பல வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தற்போது, நேற்று முன்தினம் நள்ளிரவில் நடைபெற்றுள்ள இந்த தாக்குதலும் எல்லை தாண்டியது என்றால், இது மற்றொரு ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
