நீதிமன்ற உத்தரவை மதிக்காத 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆந்திர நீதிமன்றம் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்த சம்பவம் அரசு அதிகாரிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

நீதிமன்றத்தில் முறையீடு

நாட்டில் உள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் அதனை தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் பேசி தீர்த்துக்கொள்வார்கள் அல்லது அருகில் உள்ள காவல்நிலையம் சென்று முறையிடுவார்கள், இதிலும் உரிய முடிவு கிடைக்கவில்லையென்றால் மக்கள் கடைசியாக நம்புவது நீதிமன்றத்தை மட்டுமே அப்படிபட்ட நிலையில் தான் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளது. அந்த நீதிமன்ற உத்தரவையும் அதிகாரிகள் செயல்படுத்த மறுத்தால் மக்களை யாரிடம் சென்று முறையிடுவது என தெரியாமல் குழம்பி போய் உள்ளனர். அப்பபடிபட்ட வழக்கில் தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கிராம வேளாண்மை உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்துள்ளார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள்

ஆந்திர நீதிமன்றம் இது தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரணை நடத்தி முடித்துள்ளது. அப்போது நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை மனு தொடர்பாக பரிசீலித்து இரண்டு வாரங்களுக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு அப்போது சிறப்பு தலைமை செயலாளராக இருந்த (வேளாண்மை) புனம் மலகொண்டையா, அப்போதைய வேளாண்மை சிறப்பு ஆணையர் அருண்குமார்,கர்னூல் மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன் ஆகியோருக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை அதிகாரிகள் உரிய முறையில் செயல்படுத்தவில்லையெனக்கூறி மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் உண்மையான உணர்வோடு செயல்படுத்த தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், நீதிமன்ற உத்தரவு மீது நடவடிக்கை எடுக்க கால அவகாசம் கூட அதிகாரிகள் கேட்கவில்லையென நீதிபதி வேதனை தெரிவித்தார்.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு மாதம் சிறை

இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறப்பு தலைமைசெயலாளர் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு மாத சிறை தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டது. ஐஏஎஸ் அதிகாரிகள் அருண்குமார், விரபாண்டியன் ஆகியோர் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர் இதனை ஏற்ற நீதிபதி இந்த தண்டனையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார். அதே நேரத்தில் மற்றொரு அதிகாரியான புனம் மலகொண்டையாவை வருகிற மே 13 ஆம் தேதி அல்லது அதற்கு முன் சரண்டையுமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.