இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 23 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதுவரை 3676 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு இன்னும் இந்தியாவில் கட்டுக்குள் வரவில்லை. ஆனாலும் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டுவிட்டன.

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மகாராஷ்டிராவில் தினமும் ஆயிரக்கணக்கில் பாதிப்பு உறுதியாகி கொண்டிருக்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 2940 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 44,582ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கூட கட்டுக்குள் வராதது, வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவிற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 14,753 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தினமும் 700க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகிறது. 

மகாராஷ்டிராவில் பாதிப்பு கட்டுக்குள் வந்தால் தான் தேசியளவில் நம்பிக்கை வரும். இந்தியாவில் நேற்று காலை 8 மணியிலிருந்து இன்று(வெள்ளி) காலை வரையிலான 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6088 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.