டாக்டர் இல்லாதபோது கருத்தடை ஆபரேஷன் செய்த கம்பவுண்டர்... பீகாரில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
முதலில், மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என்று கம்பவுண்டர் மற்றும் பிற ஊழியர்கள் பெண்ணின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். பின்னர், சிறிது நேரம் கழித்து, கம்பவுண்டர் பெண்ணை அழைத்துச் சென்று மருத்துவமனையின் முதல் தளத்தில் வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில், கம்பவுண்டர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தபோது 28 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் மரணத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் நடந்து 24 மணிநேரம் ஆகியும் சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
கம்பவுண்டர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க விசாரணை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, இறந்தவர் சந்தன் தாக்கூர் என்பவரின் மனைவி பபிதா தேவி என்று தெரியவதுள்ளது.
பபிதா தேவி பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்ரிகராரி நகரில் உள்ள முபாரக்பூர் 14 வார்டைச் சேர்ந்தவர். இவர் சனிக்கிழமை காலை 9 மணியளவில் படோரி சாலையில் உள்ள கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலில், மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என்று கம்பவுண்டர் மற்றும் பிற ஊழியர்கள் பெண்ணின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். பின்னர், சிறிது நேரம் கழித்து, கம்பவுண்டர் பெண்ணை அழைத்துச் சென்று மருத்துவமனையின் முதல் தளத்தில் வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
"குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை காலை 11 மணியளவில் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெண் அங்கிருந்து குடும்ப உறுப்பினர்களின் அனுமதியின்றி 10 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அந்தப் பெண் கிளினிக்கில் வைத்தே இறந்துவிட்டதாகத் தெரியவந்தது" என போலீசார் கூறுகின்றனர்.
பெண்ணின் உடல் மீண்டும் கிளினிக்கிற்கு கொண்டுவரப்பட்டபோது, பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தினர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவ ஊழியர்கள், மருத்துவர் மற்றும் கிளினிக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.