மக்களவை தேர்தலில் பாஜக 22 இடங்களில் வெற்றி பெற்றால், அடுத்த 24 மணிநேரத்தில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு நடந்த கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெருபான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 224 இடங்களில் பாஜக 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 82, மஜத கட்சிக்கு 38 இடங்களும் கிடைத்தன. அதிக இடங்களை கைப்பற்றிய பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராக தற்போது இருந்திருப்பார்.  ஆனால் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் அவர் பதவி விலகினார். இதனால் மஜத கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இதனையடுத்து முதல்வராக குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார். 

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, ஆட்சியை பிடிக்க பா.ஜ.க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. ஆனால் அது பலன் அளிக்காமல் போனது.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் குமாரசாமியும் பா.ஜ.க. பேரம் பேசியதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆட்சியை கவிழ்க்க தாங்கள் முயற்சி செய்ய மாட்டோம் என்று எடியூரப்பாவும் கூறி இருந்தார்.

இந்நிலையில், பெங்களூருவில் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா பங்கேற்றார். அதில் அவர் பேசுகையில் வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் 22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகளை வழங்கினால், அடுத்த 24 மணிநேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார். 

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில் பா.ஜ.க.விற்கு நிச்சயமாக 22 தொகுதிகள் கிடைக்கும் எனவும் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள 20 எம்எல்ஏக்கள் குமாரசாமியை முதல்வராக ஏற்கத் தயாராக இல்லை. ஆகையால் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது.