பீகார் சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ் குமார் அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், லாலுவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி மீதான ஊழல் விவகாரத்தை காரணமாக வைத்து கூட்டணியை உடைத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ். எனினும், ஒரே இரவில் பா.ஜ.வுடன் கைகோர்த்த நிதிஷ் குமார் மறுநாளே மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

அவரோடு சேர்த்து இரு கட்சிகளையும் சேர்ந்த 29 மந்திரிகள் பதவி ஏற்றார்கள். புதிய மந்திரிகள் பற்றி ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது.

தேர்தல் கமி‌ஷனில் அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் அடிப்படையில் அமைச்சர்களின் சொத்துப்பட்டியல், குற்றப்பின்னணி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

76 % அமைச்சர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள். அதன்படி மொத்தம் உள்ள 29%அமைச்சர்கள் மேல் 22 பேர் மீது கொலை, கொலை முயற்சி,கொள்ளை, திருட்டு, மோசடி, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை போன்ற குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளது.

72 % மந்திரிகள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர். பா.ஜக அமைச்சர் விஜய்குமார் சின்காவின் சொத்து ரூ. 15 கோடி, மற்றொருவரான சுரேஷ்குமாரின் சொத்து ரூ. 11 கோடி,. ஐக்கிய ஜனதா தளம் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கின் சொத்து ரூ. 5 கோடி.

மிகக் குறைந்த அளவாக பா.ஜக  அமைச்சர்கள் மங்கள் பாண்டே, பிரிஜ் கிஷோர் பிந்த், பினோத்குமார் சிங் ஆகியோரின் சொத்து முறையே ரூ. 49 லட்சம், ரூ. 52 லட்சம், ரூ. 67 லட்சம்.

9 அமைச்சர்கள் 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ளனர். இதுபற்றி பாட்னாவில் முன்னாள் துணை முதல்- மந்திரியும் லல்லு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நிதிஷ் குமார் மந்திரி சபையில் உள்ள மந்திரிகள் மீது குற்றப் பின்னணி இருப்பது அதிசயம் தான் என்று கிண்டல் செய்தார்.