கேரளாவில் தென்மேற்கு பருவமழை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 2 நாட்களாக  பல்வேறு இடங்களில் பேய் மழை பெய்து வருகிறது. 22 அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விவசாய பயிர்களும் மழையால் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதுவரை கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை எச்சரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவ உதவி கோரப்பட்டுள்ளது.

ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையிடமும் உதவி கோரப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கொச்சியில் கனமழையால் சென்னை செல்ல வேண்டிய 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.