இஸ்ரேலில் சிக்கி தவித்த இந்தியர்கள்!விமானம் மூலம் டெல்லி வந்த 212 பேரை வரவேற்றார் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 7ம் நாளாக நடந்து வருகிறது. இந்த போரில் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ள நிலையில் அங்கு சிக்கி தவித்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஏற்பாட்டில் முதல் விமானத்தில் 212 இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி ராக்கெட் மூலம் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேல் அதிர்ச்சி அடைந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி போர் பிரகடனம் அறிவித்தது. இந்த போரின் காரணமாக இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டது. இந்தநிலையில் இஸ்ரேல் பகுதியில் பணிக்காகவும், சுற்றுலாவுக்காகவும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்ற நிலையில் அவர்களின் நிலை என்ன என கேள்வி எழுந்தது.
சிக்கி தவித்த இந்தியர்கள்
மேலும் இஸ்ரேல் போர் பகுதியில் சிக்கி தவிக்கும் தங்களை மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு, இந்தியாவுக்கு அழைத்துவருவதென மத்திய அரசு முடிவு செய்து, `ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கான முயற்சிகளில் இறங்கியது.
வரவேற்ற மத்திய அமைச்சர்
அதன்படி, இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து நேற்றைய தினம் முதலாவது மீட்பு விமானம் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அந்த விமானத்தின் மூலம் முதற்கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார்.
இதையும் படியுங்கள்
ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அழைத்துவரும் பணியைத் தொடங்கிய வெளியுறவுத்துறை