பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சிக்காகக் காத்திருக்க முடியாது என்று  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே பல வியூகங்களை வகுத்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் முயற்சிகளை தொடங்கியுள்ளன. ஏற்கனவே டெல்லியில் 18 கட்சிகளின் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நடத்தியிருந்தார். ஆனால், அண்மைக் காலமாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளருக்கு அக்கட்சி முன்னிலைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. மேலும் மற்ற மாநிலங்களிலும் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது அக்கட்சி.


மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒற்றுமையின்றி காங்கிரஸ் கட்சி செயல்படுவதால் காங்கிரஸ் கட்சி பலவீனமாகவும் உள்ளது. கூட்டணி கட்சிகளும் காங்கிரஸை சாடத் தொடங்கியிருக்கின்றன. பிஹாரில் இனி நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு டெபாசிட்கூட கிடைக்காது என்று அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்தது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.ஜே.டி. தோல்வியடைய அதிக தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது காரணமானது. அதை மனதில் வைத்துதான் லாலு இதைப் பேசினார்.