2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தான் மீண்டும் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மோடி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:- 2019 தேர்தல்லை நான் மட்டும் அல்ல ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளான். ஏனென்றால் கடந்த நான்கரை ஆண்டுகளில் பா.ஜ.க அரசு செய்த நன்மைகளுக்கு அங்கீகாரம் அளிக்க மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.

மோடி அரசு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்று காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. அதில் துளி அளவும் உண்மை இல்லை என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்கள். அந்த இளைஞர்கள் எங்களை ஆதரிப்பார்கள். பா.ஜ.க.வை தனியாக வீழ்த்த முடியாது என்று எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க முயல்கிறார்கள். 

ஆனால் அந்த கூட்டணி வெற்றி பெறாது. ஏனென்றால் கொள்கை அளவில் அந்த கூட்டணி உருவாகப்போவதில்லை. மாறாக பதவி ஆசையில் கூட்டணி உருவாகிறது. மக்களின் பெரும் ஆதரவுடன் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். கடந்த 2014 தேர்தலை விட கூடுதல் இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும். நான் மீண்டும் பிரதமராக அடுத்த ஆண்டு பதவி ஏற்பேன். இவ்வாறு அந்த பேட்டியில் மோடி கூறியுள்ளார்.