சத்தீஸ்கரில் ₹33 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட 20 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர். பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் மற்றும் அமைப்பிற்குள் கருத்து வேறுபாடுகள் காரணமாக சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், ₹33 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 20 நக்சல்கள், பாதுகாப்புப் படையினர் முன்பு சரணடைந்தனர். இவர்களில் 9 பெண்கள் அடங்குவர். சரணடைந்தவர்களில் மக்கள் விடுதலை கெரில்லா ராணுவத்தின் பட்டாலியன் எண்.1-ஐச் சேர்ந்தவர்கள்.
பழங்குடியினர் மீது தாக்குதல்கள்
இதுகுறித்து பேசிய சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான், "அப்பாவி பழங்குடியினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பிற்குள் வளர்ந்து வரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஏமாற்றமடைந்ததால் இந்த நக்சல்கள் சரணடைந்துள்ளனர்" என்றார். மூத்த காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் முன்னிலையில் இந்த சரணடைதல் நிகழ்வு நடைபெற்றது.
₹33 லட்சம் வெகுமதி
சரணடைந்தவர்களில், ஷர்மிளா என்ற உய்கா (வயது 25) மற்றும் டாட்டி கோசி என்ற பர்மிளா (வயது 20) ஆகியோருக்கு தலா ₹8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, பகுதி குழு உறுப்பினர் கேடர் முச்சாகி ஹித்மாவுக்கு (வயது 54) ₹5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நான்கு நக்சல்களுக்கு தலா ₹4 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ₹1 லட்சமும் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
மறுவாழ்வு திட்டம்
சரணடைந்த அனைவருக்கும் ஆரம்பகட்ட உதவியாக தலா ₹50,000 வழங்கப்பட்டது. அரசின் கொள்கையின்படி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். மேலும், சட்டவிரோத மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய அனைவரும் வன்முறையை கைவிட வேண்டும் என்றும், அவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் மரியாதையான வாழ்க்கையை அரசு உறுதி செய்யும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் வேண்டுகோள் விடுத்தார்.
மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், சரணடைந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பு வாழ்க்கைக்கான வசதிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


