கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வயநாடு, மலப்புரம், இடுக்கி, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் ஒரே நாளில் 19 பேர் பரிதாகமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 87 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எர்ணாகுளம் ஆலுவாநகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி உள்ளன. கேரளாவில் கனமழையால் இதுவரை 33 அணைகள் நிரம்பி திறக்கப்பட்டுள்ளன. கடும் நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் அங்கு மீண்டும் மழை மிரட்ட தொடங்கியது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளதால் மீட்பு நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழந்த பகுதியில் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீட்புப் பணிகளுக்காக கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன.