டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் ரூ.27 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி போலீசாருடன் இணைந்து வருமான வரித்துறையினரும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அதில் சென்ற 2 பேர், பெரிய சூடகேஸ்களுடன் புதுடெல்லிக்கு முன் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இறங்கினர். அவர்களின் நடவடிக்கையில் ரயில்வே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அவர்களை அழைத்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த சூட்கேசை சோதனை செய்தபோது, அதில் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த புதிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள், பிடிபட்ட 2 பேரிடம் இந்த பணம் எப்படி வந்தது, யார் கொடுத்து அனுப்பியது என தீவிரமாக விசாரிக்கின்றனர்.
மத்திய அரசு கடந்த 8ம் தேதி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும்.1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த்து. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு டிசம்பர் 30ம் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால்,பொதுமக்கள் வங்கிகளில் பழைய ரூபாய் தாள்களை மாற்றி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தவேளையில் டெல்லியில் ரூ.27 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
