ஒடிசா மாநிலம் டேங்கனல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குவாரியின் குத்தகை மற்றும் வெடிவைக்கும் அனுமதி காலாவதியான பிறகும் பணிகள் தொடர்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒடிசா மாநிலம் டேங்கனல் மாவட்டத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் சனிக்கிழமை மாலை நேர்ந்த பெரும் விபத்தில், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குவாரியில் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராட்சத பாறை ஒன்று அவர்கள் மீது சரிந்து விழுந்ததே இந்த உயிரிழப்புக்குக் காரணமாகியுள்ளது.

அனுமதியின்றி இயங்கிய குவாரி

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் ஈஸ்வர் பாட்டீல், அந்த கல் குவாரி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்ததை உறுதிப்படுத்தினார்.

குவாரியின் குத்தகை காலம் 2025 டிசம்பருடன் முடிவடைந்துவிட்டது. கல் உடைப்பதற்காக வெடிவைக்கும் அனுமதி (Blasting Permission) கடந்த செப்டம்பர் மாதமே முடிந்துவிட்ட போதிலும், விதிகளை மீறி அங்குப் பணிகள் தொடர்ந்து நடந்துள்ளன.

விதிகளுக்குப் புறம்பாகக் குவாரியைத் தொடர்ந்து நடத்திய குத்தகைதாரர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள் தீவிரம்

விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் தீயணைப்புத் துறை, ஒடிசா பேரிடர் அதிரடிப் படை (ODRAF), மோப்ப நாய் படை மற்றும் கனரக இயந்திரங்கள் களமிறக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாறை இடுக்கில் சிக்கியிருந்த இரண்டு உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் ஒருவர் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் மயூர்பஞ்ச் அல்லது கேந்துஜர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்களது அடையாளம் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

நவீன் பட்நாயக் இரங்கல்

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், "டேங்கனல் கல் குவாரியில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் பாறை சரிவு காரணமாக தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து நடந்த சூழல் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.