கேரளாவில் 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பதால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டு தீவிர மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருந்து வருகிறது. ஆனாரல், இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதி வரை திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வரும் 22-ம் தேதி மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மார்ச் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா 52 பேருக்கும், கேரளாவில் 40 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன்;- கேரளாவில் அடுத்த 2 வாரங்களுக்கு அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக பணியாற்றினால் போதும். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். சுய ஊரடங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கேரளாவில் 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

மேலும், வைரஸ் தொற்று வந்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக் கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தக் கூடாது. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.