தமிழகத்தில் உள்ள அணைகள் உள்பட நாடுமுழுவதும் உள்ள 198 அணைகளின் பாதுகாப்புக்கு கூடுதலாக ரூ.1,244 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழக அணகளின் பாதுகாப்புக்கு மட்டும் ரூ.543 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

 உலக வங்கி உதவியுடன் நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டது. இந்த பணிகளை 2018 ஜுன்மாதம் முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.2100 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் மாநில அரசுகளின் பங்களிப்பாக ரூ.1,968 கோடியும், மத்திய அரசு ரூ.132 கோடியும் அளிக்கிறது.

தமிழகம், கேரளம், ஒடிசா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 198 அணைகளை மேம்படுத்த இந்த நிதிதிரட்டப்பட்டது.  இந்த பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடியாத காரணத்தால், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், உலக வங்கி ஆகியவை இணைந்து ஆலோசனை நடத்தி இதன் கால அவகாசத்தை நீட்டித்தன. இதன்படி 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.

 

இதன்படி குறிப்பிட்ட அணைகளில் ஷட்டர்களை பழுதுபார்த்தல், தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் நலன்களை பாதுகாத்தல், அணை பாதுகாப்புக்கான கட்டமைப்பை உருவாக்குதல் மேற்கொள்ளப்படும். இந்த பணிக்கு கூடுதலாக நிதி தேவைப்படுகிறது என பல்வேறு மாநிலங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று கூடி ஆலோசனை நடத்தி கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இதன்படி அணை பராமரிப்பு நிதி ரூ.2,100 கோடியில் இருந்து, ரூ.3,466 கோடியாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக ரூ.1,244 கோடி கிடைக்கும். அந்த வகையில் தமிழகத்துக்கு ரூ.543 கோடி கிடைக்கும்.