இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அண்மைக்‍ காலமாக நடைபெற்று வரும் சண்டையில், இருதரப்பிலும் சேர்த்து 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்‍குதலையடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்‍குள் புகுந்து சர்ஜிக்‍கல் ஸ்டிரைக்‍ நடவடிக்‍கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் ராணுவத்தினரும், அந்நாட்டு ஆதரவு தீவிரவாதிகளும் தொடர்ந்து ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், ரஜோரி, பூஞ்ச், ஆர்.எஸ்.புரா உள்ளிட்ட பகுதிகளில் இருதரப்பிலும் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீரை ஒட்டிய ராம்கார் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்‍குதலில், இந்திய தரப்பில் 7 அப்பாவி பொதுமக்‍கள் உயிரிழந்தனர். இதேபோல், பாகிஸ்தான் தரப்பில் நேற்று முன்தினம் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

Nakyal எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் 6 சிவிலியன்கள் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ரஜோரி, செக்டார் பகுதியில் நடத்தப்பட்ட தாக்‍குதலில், இந்திய வீரர் ஒருவரும், பொதுமக்‍கள் தரப்பில் ஒருவரும் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருதரப்பிலும் சேர்த்து இதுவரை 19 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன. இந்தநிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்‍ கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை நீடிப்பதால், காஷ்மீர் எல்லையோர மக்‍கள் தொடர்ந்து பாதுகாப்பான பகுதிகளை நோக்‍கி குடிபெயர்ந்து வருகின்றனர்.