பொய்சர் டவுன் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்டீல் ஆலையில் பணியாளர் யூனின் உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஸ்டீல் ஆலையின் லேபர் யூனியனை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் ஊழியர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். தாக்குதலை தடுக்க முயற்சித்த காவல் துறை அதிகாரிகளில் 19 பேர் கடுமையாக தாக்கப்பட்டனர். மேலும் அவர்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கர் மாவட்டத்தில் உள்ள பொய்சர் டவுன் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்டீல் ஆலையில் பணியாளர் யூனின் உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. சனிக்கிழமை அன்று யூனியன் உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு ஆலையினுள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்கள், அதிகாரிகளை கடுமையாக தாக்கினர். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்களை சேதப்படுத்தி, சூரையாடினர்.
தாக்குதலை அடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும், யூனியனை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்க தொடங்கினர். போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து, 19 போலீசார் காயமுற்றனர். இதோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 12 போலீஸ் ஜீப்கள் தாக்குதலில் சேதப்படுத்தப்பட்டன.
வழக்குப் பதிவு:
கொடூர தாக்குதல் விவகாரம் தொடர்பாக இதுவரை 27 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து இருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைப் பிரிவுகள், கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபட்டது மற்றும் குற்ற சம்பவத்தில் தொடர்பு கொண்டு இருந்தது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது என போலீஸ் அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.
ஸ்டீல் ஆலையில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அந்த பகுதி முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் பதற்ற சூழலே நிலவி வருகிறது. எனினும், அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.
