அசாமில் 2ம் கட்ட வாக்குப்பதிவில் 90 வாக்குகள் மட்டுமே கொண்ட வாக்குச்சாவடியில் 181 வாக்குகள் பதிவானதையடுத்து 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. பல கட்டங்களாக தேர்தல் நடக்கும் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், 3ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

அசாமில் கடந்த ஒன்றாம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. 2ம் கட்ட வாக்குப்பதிவில், திமா ஹசாவோ மாவட்டத்தில் ஹப்லாங் தொகுதியில் உள்ள கிராமத்தில் 90 வாக்களர்களே உள்ளனர். ஆனால் அந்த வாக்குச்சாவடியில் 181 வாக்குகள் பதிவாகியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் பணியாற்றிய 6 அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்த தேர்தல் ஆணையம், மறுவாக்குப்பதிவு நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.