ஆசிய பாரா பேட்மிண்டன் போட்டியில் ஓசூரை சேர்ந்த உயரம் குறைந்த 17 வயது சிறுமி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆசிய பாரா பேட்மிண்டன் போட்டியில் ஓசூரை சேர்ந்த உயரம் குறைந்த 17 வயது சிறுமி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிவன் என்பவருக்கு நித்யஸ்ரீ என்ற மகளும், கிஷோர் என்ற மகனும் உள்ளனர். நித்யஸ்ரீக்கு ஒரு வயது இருக்குபோது அவரது தாயார் சுமதி உடல்நலக்குறைவு காலமானார். இதனால் தங்களது குழந்தைகளை வளர்ப்பது குறித்த வேதனையில் ஆழ்ந்தார் தந்தை சிவன். இந்த நிலையில் ஆண்டுகள் செல்ல செல்ல மகள் நித்யஸ்ரீயும் மகன் கிஷோரும் தன்னை போல் வளர்ச்சி இல்லாமல் இருந்தது தந்தை சிவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. எனினும் நித்யஸ்ரீக்கு இறகுப் பந்து விளையாடுவதில் அதிக ஆர்வம் இருந்ததைக் கண்ட சிவன், தனது மகளை அங்கு உள்ள பேட்மிண்டன் பயிற்சி மையத்தில் சேர்த்தார். நித்யஸ்ரீ உயரமாக வளராவிடினும் அவரது திறமை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்தது.

அவரது ஆட்டத்திறனைப் பார்த்து லக்னோவில் தேசிய அளவில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்தது. அதன் பலனாக 2019 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் நடைப்பெற்ற பாரா பேட்மின்டன் போட்டியில் சிறுமி நித்யஸ்ரீ தங்கம் வென்று அசத்தினார். அவரின் தொடர் முயற்சியால் சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய பாரா பேட்மின்டன் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறுமி நித்யஸ்ரீ ஒற்றையர் பிரிவில் தங்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தனது மகளின் வெற்றியால் சாதனைக்கு உடல்குறைபாடு ஒரு தடை இல்லை என்பதை உணர்ந்ததாகவும் அவர் தொடர்ந்து சாதிப்பார் என நம்பிக்கை உள்ளதாகவும் நித்யஸ்ரீயின் தந்தை சிவன் கூறுயுள்ளார். மற்ற பிள்ளைகளுக்கு அளிக்கும் பயிற்சியை போல்தான் நித்யஸ்ரீக்கும் அளித்ததாகவும் ஆனால் தனிப்பட்ட திறமை காரணமாக ஆசிய பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பதாகவும் அவரது பயிற்சியாளர் செந்தில்குமார் கூறியுள்ளார். நித்யஸ்ரீ தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என அவரது தந்தை சிவன் கேட்டுக் கொண்டுள்ளார். மாணவி நித்யஸ்ரீ சாதனைக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதை மீண்டும் அனைவருக்கும் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
