Spicejet Flight Incident: மும்பை விமான நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூருக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் B737 ரக விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
மும்பையில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூர் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பயணத்தின் போது நடுவானில் திடீரென குலுங்கியதால் விமானத்தில் இருந்த 17 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டு இருக்கிறது.
நேற்று மாலை மும்பை விமான நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூருக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் B737 ரக விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானம் பறந்து கொண்டிருந்த உயரத்தை ஏற்றவோ, குறைக்கவோ விமான முயற்சித்தார். அப்போது பலத்த காற்று வீசியதை அடுத்து விமானம் மிக மோசமாக குலுங்கியது.
பயணிகளுக்கு காயம்:
யாரும் எதிர்பாராத நேரத்தில் விமானம் குலுங்கியதை அடுத்து, அதில் இருந்த பயணிகள் நிலை தடுமாறி ஒருவரை ஒருவர் மோதி கொண்டனர். சிலர் பலத்த காயங்கள் ஏற்படும் வகையில், இடித்துக் கொண்டனர். இதனால் விமானத்தில் பயணித்த 14 பயணிகள் மற்றும் மூன்று விமான ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது. காற்றில் குலுங்கிய போதிலும், விமானம் துர்காபூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

ஒழுங்குமுறை விசாரணை:
"சில பயணிகளுக்கு தலையில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டு இருக்கிறது. ஒருவருக்கு முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது. ஒழுங்குமுறை விசாரணை நடத்த குழுக்களை அமைத்து இருக்கிறோம். பயணிகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்," என விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
வருத்தம் தெரிவித்த ஸ்பைஸ்ஜெட்:
விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குலுங்கியதால் பயணிகளுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்திற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வருத்தம் தெரிவித்து இருக்கிறது.
"மே 1 ஆம் தேதி ஸ்பைஸ்ஜெட் போயிங் B737 விமானம் SG-945 மும்பையில் இருந்து துர்காபூர் செல்லும் வழியில் காற்றின் வேகத்தில் குலுங்கியது. இதனால் பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. விமானம் துர்காபூர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் காயமுற்ற பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது," என ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
