கர்நாடகாவில் நடைபெற இருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இடைத்தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. 

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அந்த கட்சிகள் பிறப்பித்த கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். 

இதனையடுத்து, தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 17 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே, கர்நாடகத்தில் காலியாக இருக்கும் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இந்நிலையில், தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது 15 தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதால், இந்த வழக்கில் முடிவு எட்டப்படும் வரை தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? என உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது. இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை இடைத்தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.