ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவி வரும் நிலையில், தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையைச் சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள்சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, காஷ்மீரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டுவருகின்றன. மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும், மாநிலம் பிரிக்கப்படும் என பல்வேறு ஊகங்கள் நிலவிவருகின்றன. 
காஷ்மீரில் பதற்றம் நிலவி வரும் நிலையில், நள்ளிரவு முதல் அங்கே இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும்வரை அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், பொதுக் கூட்டங்கள் நடத்தவோ, பேரணியாக செல்லவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீரென முன்னாள் முதல்வர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களுமான உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேறாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது.


“தாம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உணர்வதாகவு, பொதுமக்கள் அனைவரும் அமைதியுடன் வீடுகளில் இருக்க வேண்டும். காஷ்மீரில் என்ன நடக்கப்போகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்” இணையதள சேவைகள் முடக்கப்படுவதற்கு முன்பாக வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதேபோல மெகபூபா முஃப்தி,  “ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை போன்ற தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது மிகவும் கொடூரமானது. பொதுமக்களின் குரல்வளை நசுக்குவதை ஒட்டுமொத்த உலகமும் வேடிக்கை பார்க்கிறது” என்று  ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது நடந்துவருவதால், இன்று காஷ்மீர் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக முடிவு செய்துள்ளன. இன்று மத்திய அமைச்சரவை கூடும் நிலையில், காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.