அம்மாடி !! திருப்பதில் ஒரு மாதத்தில் 140 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை.. 22 லட்சம் பேர் தரிசனம்..
திருப்பதியில் முதல்முறையாக ஒரே மாதத்தில் 140 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது.
திருப்பதி திருமலையில் தொலைபேசி மூலமாக பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பதி தேவஸ்தான தலைமைச் செயல் அலுவலர் சுப்பா ரெட்டி கலந்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 22 லட்சத்து 22 ஆயிரம் பேர் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கூறினார்.
இதுவரை இல்லாத வகையில் கடந்த ஆக்ஸ்ட மாதத்தில் மட்டும் 140 கோடியே 34 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தாண்டிற்காக பிரமோற்சவம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளதாகவும் அன்றைய தினம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பாக கோயிலுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:இந்தியா பிரிவினையில் பிரிந்த இஸ்லாமிய சகோதரி.. 75 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சீக்கியர் - நெகிழ்ச்சி சம்பவம்!
திருப்பதியில் முதல்முறையாக ஒரே மாதத்தில் 140 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு மாதத்தில் 22 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்தாண்டு பிரம்மோற்சவத்தை வெகு விமர்சையாக நடத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கும் பிரம்மோற்சம் அக்டோபர் 5 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த 9 நாட்களும் நான்கு மாட வீதிகளில் சாமி ஊர்வலம் விமர்சையாக நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்வுகளான அக்டோபர் மாதம் 1ம் தேதி கருட சேவையும் அக்டோபர் 2-ம் தேதி தங்க ரதத்தில் சுவாமி பவனி ஊர்வலம் நடைபெறவுள்ளது. 3ம் தேதி காலை தேர்த் திருவிழாவும், 4-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால், பிரம்மோற்சவத்தின் போது மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் பெற்றோர் செல்லும் தரிசனமும், விஜபி தரிசனமும் ரத்து செய்யப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:திருப்பதி பிரம்மோற்சவம் 27ல் தொடக்கம் .. சிறப்பு பேருந்துகள் எந்தெந்த வழிகளில் இயக்கம்..? முழு விவரம்..