வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பீகாரில் பெய்த மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பலர் வீடுகளை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மீட்பு படையினர் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.

வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை பீகாரில் 30 பேர் பலியாகி இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. மழை இன்னும் தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி,கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், அம்மாநில துணை முதல்வர் சுஷில்மோடி பாட்னாவில் சிக்கிக்கொண்டார். அவரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்

உத்தரப்பிரதேசத்திலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த மாநிலத்தில் மட்டும் 93 பேர் பலியாகி இருக்கின்றனர். பல இடங்களில் மருத்துவமனைகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர். பலியா மாவட்ட சிறைச்சாலையில் இருந்து கைதிகள் வெள்ளம் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடுமுழுவதும் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. பேரிடர் மீட்பு படைகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சென்று மீட்பணிகளில் முழுமையாக ஈடுபட உத்தரவிடப்பட்டிருக்கிறது.