13 boxes of Goa-Patna express train near Manipur Railway Station
உத்தரப்பிரதேச மாநிலம், மனிக்பூர் ரெயில்நிலையம் அருகே கோவா-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 13 பெட்டிகள் இன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள், 9 பேர் காயமடைந்தனர்.
பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து கோவாவின் வாஸ்கோடகாமா நகருக்கு பாட்னா-கோவா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் உத்தரப்பிரதேசம், சித்தரகூட் மாவட்டம், மணிக்பூர் ரெயில் நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்து சேர்ந்தது. அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் காலை 4.18 மணிக்கு திடீரென ரெயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின.
இதையடுத்து, உடனடிடாயாக ரெயில்நிலையத்துக்கு தகவல்தெரிவிக்கப்பட்டு, மீட்பு படையினர், போலீசார், தீயணைப்புபடையினர், ரெயில்வே போலீசார் விைரந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே பேட்டையா மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள், காயமடைந்த 9 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி. அந்த குமார் கூறுகையில், “ ரெயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட பிளவுதான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து விரைவாக நடந்து வருகின்றன. இந்த விபத்தால் பாட்னா-அலகாபாத் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து அறிந்த மத்திய ரெயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், காயமடைந்தவர்கள் சிறப்பான சிகிச்சையும், விரைவாக குணமாக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து ரெயில்வேநிர்வாகம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் அவர் உத்தரவிட்டார். விபத்தில்பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும், அதிகமான காயமடைந்தவர்களுக்கு ரூ.ஒரு லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.
