டெல்லி விமான நிலையத்தில் செப்டம்பர் 15 வரை தினமும் 114 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Flights Cancels at Delhi Airport: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை மேம்பாட்டுப் பணிகள் காரணமாக செப்டம்பர் 15ம் தேதி வரை தினமும் 114 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்படும் என டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் (DIAL) தெரிவித்துள்ளது. மேலும் 86 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட உள்ளது. விமான நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக DIAL நிறுவன தலைமை செயல் அதிகாரி விதே குமார் ஜெய்புரியார் தெரிவித்தார்.

டெல்லி விமான நிலையத்தில் 114 விமானங்கள் ரத்து

டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் கூறியுள்ளபடி ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 200 விமானங்கள் பாதிக்கப்படும். 114 விமானங்கள் ரத்து செய்யப்படும், மீதமுள்ள 86 விமானங்கள் உச்ச நேரங்களிலிருந்து உச்ச நேரமற்ற நேரங்களுக்கு மாற்றியமைக்கப்படும். நாட்டின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையமான இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு (IGIA), தினமும் சுமார் 1,450 விமானங்கள் வந்து செல்கின்றன.

ஓடுபாதை பராமரிப்பு பணி

இந்த விமான நிலையம் RW 09/27, RW 11R/29L, RW 11L/29R மற்றும் RW 10/28 ஆகிய நான்கு ஓடுபாதைகளையும், T1 மற்றும் T3 ஆகிய இரண்டு செயல்பாட்டு முனையங்களையும் கொண்டுள்ளது. T2 என்ற ஓடுபாதையே தற்போது பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுகும் ஏராளமான உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இப்போது ஓடுபாதை மேம்பாட்டு பணி காரணமாக இண்டிகோ, ஏர் இந்தியா ஆகிய முக்கிய விமான நிறுவனங்கள் முறையே தினமும் 33, 25 விமானங்களை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு விமான சேவை பாதிப்பு

பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, அதிக நேரங்களில் பயன்படுத்தப்படும் விமானங்களை சாதாரண நேரங்களிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லி விமான சேவைகளில் ஏற்படும் இந்தக் குறைப்பு, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, பாட்னா, அகமதாபாத் போன்ற பிற நகர விமான நிலையங்களிலும் லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணத்தை சரியாக திட்டமிடுங்கள்

அதாவது சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதரபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்படும். இந்த விமான மாற்றங்கள் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால், டெல்லிக்கு பயணிப்பவர்கள் முன்கூட்டியே தங்கள் பயணத்திட்டத்தை சரிபார்த்துக் கொள்வது நல்லது.