பிரயாக்ராஜ் நகரில் கார்-பேருந்து மோதிய கோர விபத்தில் மகா கும்பமேளாவுக்கு சென்ற 10 பக்தர்கள் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா திருவிழா பிப்ரவரி 26ம் தேதி வரை அதாவது 45 நாள்களுக்கு நடைபெறுகிறது. மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பல கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
கங்கா, யமுனை, சரஸ்வதி நதிகள் இணைவதாக கூறப்படும் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிரயாக்ராஜ் நகரில் திரண்டு வருகின்றனர். இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்கள் 10 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்திலிருந்து கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கமத்தில் நீராட பக்தர்கள் பொலேரோ வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் உள்ள மேஜா பகுதியில் அந்த வாகனம் சென்றபோது மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் இருந்து சென்ற பேருந்தும், வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 10 பக்தர்கள் உடல்நசுங்கி பரிபாதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பத்தினர் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மகா கும்பமேளா நடக்கும் வேளையில் பிரயாக்ராஜில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருவது பக்தர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வார தொடக்கத்தில் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில், மகா கும்பமேளாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஆந்திரப் பிரதேச பக்தர்கள் 7 பேர் விபத்தில் இறந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். ஜனவரி 29ம் தேதி மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் விடியற்காலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 60 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
