என் சகோதரரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்! பிரதமருக்கு பிரியங்கா காந்தி அட்வைஸ்
பிரதமர் மோடிக்கு அட்வைஸ் கொடுத்திருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மக்களின் குரலைக் கேளுங்கள் என்றும் பயப்பட வேண்டாம் என்றும் சொல்லி இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி தன்னை 91 முறை அவதூறாகப் பேசியுள்ளதாகக் கூறியதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும் எனவும் தனது சகோதரர் ராகுல் காந்தியிடம் இருந்து அதனைக் கற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி சனிக்கிழமை கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னை 'விஷப் பாம்பு' என்று திட்டியதைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது, இதுவரை காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் 91 முறை பல்வேறு வகையில் தன்னை மீது அவதூறுகளை வீசியுள்ளனர் என்றார்.
IRCTC : இனி ஒருவருடைய ரயில் டிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. முழு விபரம்
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமரின் பேச்சுக்கு பதில் கூறியுள்ளார். பிரதமர் மோடி கூறும் 91 அவதூறுகள் ஒரு பக்கத்திற்குள் அடங்கிவிடும் என்ற அவர், "நீங்கள் என் குடும்பத்திற்குச் செய்த துஷ்பிரயோகங்களைப் பார்த்து, பட்டியலிடத் தொடங்கினால் பல புத்தகங்களை வெளியிட வேண்டியிருக்கும்" என்றார்.
"கடந்த இரண்டு மூன்று நாட்களாக நான் பார்ப்பது வினோதமாக இருக்கிறது. பல பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன், இந்திரா காந்தி, இந்த நாட்டிற்காக தோட்டாக்களை தாங்கிக்கொண்டவர். ராஜீவ் காந்தி தனது உயிரைத் தியாகம் செய்தார். பி.வி. நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் இந்த நாட்டிற்காக கடுமையாக உழைப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் (மோடி) தான் என்னை அவதூறாகப் பேசுகிறார்கள் என்று அழுகிறார்." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் துயரத்தைக் கேட்பதற்குப் பதிலாக, தன் பிரச்சனைகளை மக்களிடம் புலம்புகிறார்" என பிரதமர் மோடியை விமர்சித்தார். "பிரதமர் அலுவலகத்தில் யாரோ ஒருவர் இந்தப் பட்டியலை தயாரித்திருப்பது மக்களின் பிரச்சனைகள் பற்றி அல்ல, பிரதமரை பலமுறை துஷ்பிரயோகம் செய்தவர்கள் யார் யார் என்பதுதான்" என்றும் பிரியங்கா கூறினார்.
மேலும் பேசிய பிரியங்கா, "மோடி ஜி, தைரியமாக இருங்கள், என் சகோதரர் ராகுல் காந்தியைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த நாட்டிற்காக அவதூறுகளை மட்டுமல்ல, துப்பாக்கி குண்டுகளையும் எதிர்கொள்ள என் சகோதரர் தயாராகவே இருக்கிறார். நீங்கள் துஷ்பிரயோகம் செய்தாலும், துப்பாக்கியால் சுட வந்தாலும், கத்தியால் குத்த வந்தாலும் உண்மையின் பக்கம் நிற்பேன் என்று சொல்கிறார்" என பிரியங்கா குறிப்பிட்டார்.
"மோடி ஜி பயப்படாதீர்கள். இது பொது வாழ்க்கை, இதுபோன்ற விஷயங்களை தாங்கிக்கொள்ளும் தைரியத்துடன் முன்னேற வேண்டும்" என்றும் பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி அறிவுரை கூறினார்.
மக்களின் நல்ல செயல்களை கொண்டாட வேண்டும்.. 100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு