India@75 Freedom Fighters: ராணி வேலு நாச்சியார் - பிரிட்டிஷாரை கலங்கடித்த வீரத் தமிழ்ப்பெண்!
இந்தியாவிலேயே பிரிட்டிஷாரை எதிர்த்து தீரத்துடன் போரிட்ட ஜான்சி ராணிக்கு முன்பே, அவர்களை போர்க்களத்தில் துணிவுடன் சந்தித்த முதல் பெண் வேலு நாச்சியார். 1800-களுக்கு முன்பே பிரிட்டிஷாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்தான் வேலு நாச்சியார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இளம் வயதிலேயே போராடிய முதல் தமிழ்ப் பெண்ணும், ராணி வேலு நாச்சியார்தான். 1730-ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண்ணாகப் பிறந்தவர் வேலு நாச்சியார். பெண்ணாகப் பிறந்தாலும், வேலு நாச்சியார் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். வாள்வீச்சு, குதிரையேற்றம் என சாகசப் பயிற்சிகளையெல்லாம் வேலு நாச்சியார் கற்றார். 16 வயதை வேலு நாச்சியார் அடைந்தபோது சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த முத்துவடுகநாதத் தேவருக்கு மனைவியானார்.
1950-ஆம் ஆண்டில் முத்துவடுகநாதர் சிவகங்கையின் மன்னரானார். அந்தக் காலகட்டத்தில் ஆற்காடு நவாப்புக்குக் கப்பம் கட்ட முத்துவடுகநாதனர் மறுத்தார். இதன் காரணமாக ஆற்காடு நவாப்பும் பிரிட்டிஷாரும் 1772- ஆம் ஆண்டு சிவகங்கையை முற்றுகையிட்டனர். அந்தப் போரில் மன்னர் முத்துவடுகநாதர் வீரமரணம் அடைந்தார். கணவரை இழந்த துயரத்திலும், அவருடைய உடலை அடக்கம் செய்துவிட்டு, தன் நாட்டை மீட்டெடுக்க சபதம் செய்துவிட்டு அங்கிருந்து வேலு நாச்சியார் வெளியேறினார். விருப்பாச்சி பாளையம் என்ற ஊருக்கு தன் மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் வேலு நாச்சியாருக்கு சென்றார்.
அங்கு மருது சகோதரர்கள் அவருக்குத் துணையாக இருந்தனர். விருப்பாட்சி பாளையத்தை கோபால நாயக்கர் என்பவர் ஆண்டு வந்தார். இவர், பூலித்தேவனின் நண்பர். வேலு நாச்சியார் அங்கு தங்கியிருக்க பல உதவிகளைச் செய்தார். விருப்பாச்சி பாளையம் உள்ளிட்ட பகுதிகள் திண்டுக்கல் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது. விருப்பாச்சி பாளையம் வந்த பிறகு வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் சும்மா இருக்கவில்லை.
பிரிட்டிஷார் மற்றும் நவாப் படைகளுக்கு எதிராக வேலு நாச்சியார் படைகளைத் திரட்டத் தொடங்கினர். அந்தப் படையில் சேர்ந்தவர்களுக்கு வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் பயிற்சி அளித்தனர். இப்படியே எட்டு ஆண்டுகள் உருண்டோடின. அந்தக் காலகட்டத்தில் சிவகங்கை மக்கள் மீது நவாப் வரி மேல் வரிகளை விதித்து துன்புறுத்திக் கொண்டிருந்தார். இதனால், பொதுமக்கள் நவாப் - ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் திரளத் தொடங்கினர். இதைப் பயன்படுத்திக்கொண்ட வேலு நாச்சியார் மருது சகோதர்கள் உதவியுடன் சிவகங்கையை மீட்கும் போரில் குதித்தார்.
வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலியும் உதவி புரிந்தார். படை வீரர்களையும், ஆயுதங்களையும் கொடுத்து அவர் உதவினார். பிரிட்டிஷ் மற்றும் நவாப் படைகளைத் தீரத்தோடு எதிர்த்த வேலு நாச்சியார், 8 ஆண்டுகள் கழித்து சிவகங்கையை மீட்டார். 1780-ஆம் ஆண்டில் சிவகங்கையில் மீண்டும் காலடியை எடுத்து வைத்தார் வேலு நாச்சியார். சிவகங்கையின் அரசியாக வேலு நாச்சியார் பொறுப்பேற்றார்.
18-ஆம் நூற்றாண்டில் பிரிடிஷ் அரசுக்கு எதிராக தென்னிந்தியாவில் நிலையான ஆட்சியை வழங்கியவர் என்று பெயரெடுத்தார் வேலு நாச்சியார். வீரத்துக்கு பெயர் போன வேலு நாச்சியார்,1796-ஆம் ஆண்டில் காலமானதாக நம்பப்படுகிறது. சிவகங்கை சீமை என்றாலே வேலு நாச்சியாரையும் மருது சகோதரர்களையும் பிரித்து பார்க்க முடியாது. காலங்கள் எத்தனை ஆனாலும் வேலு நாச்சியாரின் வீரம் என்றும் பேசப்படும்.