India@75 Freedom Fighters: சுதந்திர போராட்டத்தில் சென்னையில் அதிர்வலையை ஏற்படுத்திய ம.சிங்காரவேலர்..!
தமிழகத்தில் தேசத்தின் விடுதலைப் போராட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது தன்னார்வமாக அதில் பங்கேற்றவர்கள், கணக்கிலடங்காதவர்கள். அவர்களில் ம.சிங்காரவேலரும் ஒருவர். தென் இந்தியாவில் முதல் பொதுவுடைமைவாதியாக அறியப்படுகிறவர் ம.சிங்காரவேலர்.
சென்னையில் 1860-ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட மீனவர் குடும்பத்தில் பிறந்தவர்தான் சிங்காரவேலர். சென்னையில் பள்ளிக் கல்வியை முடித்தார். மாநிலக் கல்லூரியில் மேற்படிப்பையும் முடித்தார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1907-ஆம் ஆண்டில் வழக்கறிஞராகத் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். சிங்காரவாலருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் என பல மொழிகள் அத்துப்படி. அந்தக் காலகட்டத்திலேயே பல மொழிகளைக் கற்று வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
தன் சமூகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பது கண்டு சிறுவயதிலிருந்தே சிங்காரவேலருக்கு ஆதங்கம் உண்டு. அதற்கேற்ப மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீதிமன்றத்திலேயே பல அவமானங்களுக்கு சிங்காரவேலர் ஆளானார். அதனால், தன் கறுப்பு அங்கியைக் கழற்றி எறிந்து இனி நீதிமன்றத்துக்கே வரப்போவதில்லை என்றும், என் சமுதாய மக்களுக்காகவே பாடுபடுவேன் என்று அறிவித்தார்.
அதன்படியே சிங்காரவேலர் செய்தார். காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். பின்னர் தேசத்தின் விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார்., சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஊர் ஊராகச் சென்று கல்வியறிவு இல்லாத மக்களுக்கு விழிப்புணர்வு பாடங்களை எடுத்தார். சிறந்த பேச்சாளரான சிங்காரவேலர், மக்களிடையே உரையாற்றி தேசிய விழிப்புணர்வையும் சேர்த்தே ஊட்டினார்.
அந்த நேரத்தில் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வருகைப் புரிந்தார். இதை எதிர்த்து சென்னையில் மாபெரும் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார் சிங்காரவேலர். மேலும் தொழிலாளர்கள் படும் துயரங்களைக் கண்டு தொழிலாளர்களின் போராளியாகவும் மாறினார். 1918-ல் இந்தியாவிலேயே முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக ‘லேபர் கிஸான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான்’ என்ற கட்சியையும் 1923-ல் தொடங்கினார்.
அதோடு ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற ஆங்கில வார இதழையும் ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் நடத்தியதோடு, சுதந்திரப் போராட்டம், தொழிலாளர் போராட்டங்கள், தென்னிந்திய ரயில்வே போராட்டங்களில் மும்முரமாகப் பங்கேற்றார். 1928-ஆம் ஆண்டில் தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு 1930-ல் விடுதலையானார்.
சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தையும் வெற்றிகரமாக நடத்திக்காட்டிதில் இவருடைய பங்கு இருந்தது. அதோடு பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும் ஆதரித்தார். பொதுவுடைமை இயக்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று அன்றே முழங்கினார். சுதந்திரப் போராட்டம், தொழிலாளர்கள் போராடங்களில் ஈடுபட்ட அவரை தேசபக்தர் என்றும் சிந்தனைச் சிற்பி என்றும் போற்றப்பட்டார்.
ஏழை, எளிய மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த சிங்காரவேலர், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1946-ம் ஆண்டிலேயே தன்னுடைய 86-வது வயதில் மறைந்தார். அவர் மறைந்தாலும் இந்திய நினைவலைகள் சென்னையில் இன்று உள்ளன. சென்னையில் மீனவர் வீட்டு வசதித் திட்டத்துக்கு தமிழக அரசு இவருடைய பெயரைச் சூட்டியுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ‘சிங்கார வேலர் மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.