India@75 : ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண் - ராணி சென்னம்மா
கர்நாடகத்தில் பெல்காம் ராஜ்ஜியத்தின் அருகே உள்ள ககதி கிராமத்தில் 1778 அன்று பிறந்தார் சென்னம்மா.
சென்னம்மா என்றால் அழகிய பெண் என்று அர்த்தம். ராஜ குடும்பத் தினர்போல சகல வசதிகளுடன் வளர்ந்தார். சமஸ்கிருதம், கன்னடம், மராட்டி, உருது மொழிகளைக் கற்றார். இளம் வயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில்வித்தையில் தேர்ச்சி பெற்றார். 15 வயதில் கிட்டூர் அரசருடன் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் பிறந்தான். சென்னம்மாவின் இந்த திருமண வாழ்க்கை நெடுநாள் நீடிக்கவில்லை. 1816ல் கணவர் இறந்தார். பிறகு 1824ல் மகனும் இறந்து விடுகிறார்.
வளர்ப்பு மகன் சிவலிங்கப்பாவை புதிய அரசராக விரும்பினார் சென்னம்மா. ஆனால், கிழக்கிந்தியக் கம்பெனி, மறைந்த மன்னருக்கு நேரடி வாரிசுகள் இல்லை என்று கூறி, கிழக்கிந்தியக் கம்பெனி நாட்டைக் கைப்பற்றியது. சென்னம்மா கம்பெனி உத்தரவின்படி செல்ல மறுத்து ஒரு எதிர்ப்பை நடத்தினார். 1824ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இராணுவம் சென்னம்மாவின் படைகளால் தாக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடந்த போரில், கம்பெனி ராணுவத்தின் தலைவரான சர் ஜான் தாக்கரே, ராணி சென்னம்மாவின் லெப்டினன்ட் அமத்தூர் பாலப்பாவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டு உயர்மட்ட பிரிட்டிஷ் அதிகாரிகளும் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர். இது கிழக்கிந்திய நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிகாரிகளை விடுவித்தால் போர்நிறுத்தம் வழங்கப்படும். சென்னம்மா இந்த வாய்ப்பை ஏற்று அவர்களை விடுவித்தார்.
இருப்பினும், துரோகக் கம்பெனி கித்தூரைத் தாக்க மீண்டும் படைகளை அனுப்பியது. கடுமையான போரில், ராணி சிறைபிடிக்கப்பட்டு பெயில்ஹோங்கல் கோட்டையில் அடைக்கப்பட்டார். ராணியின் தளபதி சங்கொல்லி ராயண்ணா கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவரது வளர்ப்பு மகனும் கைது செய்யப்பட்டார். ராணி சென்னம்மா கோட்டைக்குள் இறந்து தியாகி ஆனார். கர்நாடகத்தில் பல இடங்களில் ராணி சென்னம்மாவுக்கு சிலைகள் வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.