Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதிப்போட்டி ! கனமழையால் ஆட்டம் பாதிப்பு ! இன்று தொடர்கிறது போட்டி !!

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 46.1 ஓவரில்  5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று ஆட்டம் தொடர்கிறது.

world cu cricket semi final rain
Author
England, First Published Jul 10, 2019, 6:26 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற  முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. 

டாஸ்  ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்திலும், ஹென்றி நிகோல்சும் களம் புகுந்தனர். மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும், ஜஸ்பிரித் பும்ராவும் மிரட்டினர்.

world cu cricket semi final rain

முதல் பந்திலேயே கப்திலுக்கு எல்.பி.டபிள்யூ. கேட்டு இந்திய வீரர்கள் முறையிட்டனர். நடுவர் மறுத்ததால் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்யப்பட்டது. டி.வி. ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டம்பை விட்டு விலகிச் செல்வது தெரிந்தது. இதனால் இந்தியாவின் டி.ஆர்.எஸ். வாய்ப்பு வீணானது.

முதல் 2 ஓவர் மெய்டன் ஆன நிலையில் 3-வது ஓவரில் கப்தில் (1 ரன், 14 பந்து) பும்ராவின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் கேன் வில்லியம்சன், நிகோல்சுடன் இணைந்தார். இருவரும் எச்சரிக்கையுடன், நிதானமாக ஆடியதால் ஆட்டத்தின் போக்கு மந்தமானது. 

world cu cricket semi final rain

பவர்-பிளேயான முதல் 10 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நடப்பு உலக கோப்பையில் பவர்-பிளேயில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான்.

அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்ட இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பிரித்தார். அவரது பந்து வீச்சில் நிகோல்ஸ் (28 ரன், 51 பந்து, 2 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார்.

world cu cricket semi final rain

இதைத் தொடர்ந்து வில்லியம்சனும், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும் கைகோர்த்து அணியை மீட்டெடுக்க போராடினர். இவர்களுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக நெருக்கடி தந்தனர். 15 முதல் 27-வது ஓவர் வரை பந்து பவுண்டரி பக்கமே போகவில்லை. இவர்களுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. வில்லியம்சன் 36 ரன்னில் ரன் அவுட் கண்டத்தில் இருந்து தப்பினார். டெய்லர் 22 ரன்னில், பும்ராவின் பந்து வீச்சில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் டோனி கோட்டை விட்டார். இதற்கிடையே அந்த அணி 28.1 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது.

world cu cricket semi final rain

அணியின் ஸ்கோர் 134 ரன்களை (35.2 ஓவர்) எட்டிய போது வில்லியம்சன் 67 ரன்களில் (95 பந்து, 6 பவுண்டரி) சாஹலின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஜேம்ஸ் நீஷம் (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு கடினமாக இருந்த போதிலும் டெய்லர் கொஞ்சம் வேகமாக ரன்களை திரட்டினார். இந்தியாவின் பீல்டிங்கும் கடைசி கட்டத்தில் சொதப்பியது.

நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தனது 50-வது அரைசதத்தை நிறைவு செய்த ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும் (85 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் டாம் லாதம் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

world cu cricket semi final rain

தொடர்ந்து மழை பெய்ததால், நடுவர்களும், வீரர்களும் நீண்ட நேரம் காத்திருந்தனர். டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப் படி 20 ஓவர்களில் இந்தியாவுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்படலாம் என்ற சூழலும் வந்தது. ஆனால் விட்டு விட்டு பெய்த மழை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

world cu cricket semi final rain

இந்த உலக கோப்பையில் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டும் மாற்றுநாள் (ரிசர்வ் டே) வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மழையால் பாதிக்கப்பட்ட இந்த அரை இறுதி ஆட்டம் மாற்று நாளான இன்று நடைபெறும். இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இன்றைய நாளில் நியூசிலாந்து அணி அதே நிலையில் இருந்து (211-5 ரன்) எஞ்சிய 23 பந்துகள் பேட்டிங் செய்யும். அதன் பிறகு இந்திய அணி ஆடும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

Follow Us:
Download App:
  • android
  • ios